மேல்மலையனூர் அருகே கிணற்றில் பிணமாக மிதந்த பள்ளி மாணவி போலீஸ் விசாரணை

மேல்மலையனூர் அருகே கிணற்றில் பிணமாக மிதந்த பள்ளி மாணவியின் உடலை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-10-07 18:45 GMT

மேல்மலையனூர், 

மேல்மலையனூர் அருகே கொடுக்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கலைச்செல்வன். விவசாயி. இவரது மகள் ராஜேஸ்வரி (வயது 16). இவர், மேல்மலையனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 3 நாட்களாக ராஜேஸ்வரியை காணவில்லை. அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பெற்றோர், வளத்தி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரித்து வந்தனர்.

கிணற்றில் பிணம்

இந்த நிலையில், நேற்று கொடுக்கன்குப்பத்தில் உள்ள துளசி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் ராஜேஸ்வரி பிணமாக கிடந்ததை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்தனர். இதுகுறித்து அவர்கள், மேல்மலையனூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், நிலைய அலுவலர் சாமள வண்ணன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று, 30 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தண்ணீரில் மிதந்த ராஜேஸ்வரியின் உடலை மீட்டு கொண்டுவந்தனர். இதற்கிடையே, இதுபற்றி அறிந்த அவரது பெற்றோர் அங்கு வந்தனர். பிணமாக கிடந்த மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

காரணம் என்ன?

போலீஸ், இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமையிலான போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்