2-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி

சரவணம்பட்டியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி விடுதியின் 2-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலைக்கு முயன்றார்.

Update: 2022-11-03 18:45 GMT

சரவணம்பட்டி

சரவணம்பட்டியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி விடுதியின் 2-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலைக்கு முயன்றார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

மாடியில் இருந்து குதித்த மாணவி

கோவை சரவணம்பட்டியில் பி.பி.ஜி. நர்சிங் கல்லூரி உள்ளது. இங்குள்ள விடுதியில் தங்கி தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மதுரைவீரன் நகரை சேர்ந்த லாரன்ஸ் என்பவரின் மகள் ஜெனிதா (வயது 18) முதலாம் ஆண்டு டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார். இவர் தன்னுடன் படிக்கும் மாணவர் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது.

சம்பவத்தன்று மாலை மாணவியும், அந்த மாணவனும் செல்போ னில் பேசிக்கொண்டு இருந்தாக தெரிகிறது. அப்போது செல்போனில் பேசியபடி விடுதியின் 2-வது மாடிக்கு சென்ற மாணவி ஜெனிதா திடீரென அங்கிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

மருத்துவமனையில் சிகிச்சை

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் அங்கு ஓடி வந்தனர். பின்னர் அவர்கள், விடுதி காப்பாளர் தேவகியுடன் சேர்ந்து ஜெனிதாவை மீட்டு கல்லூரி வளாகத்தில் உள்ள சிகிச்சை மையத்தில் முதலுதவி அளித்தனர்.

இதில் ஜெனிதாவுக்கு பின்புற தண்டுவடப் பகுதியில் எலும்பு முறிவும், இடது காலில் எலும்பு முறிவும் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவரை மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள கல்லூரிக்கு சொந்தமான அஸ்வினி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கல்லூரி மாணவி எதற்காக தற்கொலைக்கு முயன்றார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்