7-ம் வகுப்பு மாணவி மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடிப்பு

பொங்கலூர் அருகே 7-ம் வகுப்பு மாணவி மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. மாணவியின் சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-04-15 17:50 GMT

பொங்கலூர் அருகே 7-ம் வகுப்பு மாணவி மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. மாணவியின் சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது பற்றி போலீ்ஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

7-ம் வகுப்பு மாணவி

திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை அடுத்த தொங்குட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மசநல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 45). இவரது மகள் வைஷ்ணவி (13). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் தங்களது மகளை காணவில்லை என பெற்றோர் பல இடங்களில் தேடினர். அப்போது அருகில் இருந்த தனியாருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றின் அருகே வைஷ்ணவியின் செருப்பு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கிணற்றில் பிணம்

இதனைத் தொடர்ந்து வைஷ்ணவி அந்த கிணற்றில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. உடனடியாக இதுகுறித்து திருப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி தேடினார்கள். பின்னர் மாணவியின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

இது குறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவி வைஷ்ணவி உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடரும் மர்மம்

மாணவி வைஷ்ணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா?, அல்லது வேறு யாரும் கிணற்றில் தள்ளி கொலை செய்தனரா? என்று தெரியவில்லை. பள்ளி மாணவியின் மரணத்தில் மர்மம் நீடித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாணவியின் மரணத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்