பள்ளிக்கூட வராண்டாவில் பாடம் படிக்கும் மாணவர்கள்

ராமநாதபுரத்தில் வகுப்பறையை கல்வி அலுவலகத்திற்கு ஒதுக்கியதால் மாணவர்கள் வராண்டாவில் பாடம் படிக்கிறார்கள். இதையடுத்து பெற்றோர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-14 17:15 GMT


ராமநாதபுரத்தில் வகுப்பறையை கல்வி அலுவலகத்திற்கு ஒதுக்கியதால் மாணவர்கள் வராண்டாவில் பாடம் படிக்கிறார்கள். இதையடுத்து பெற்றோர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடக்கப்பள்ளி

ராமநாதபுரம் ஓம்சக்திநகர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1 முதல் 5 வரையிலான இந்த பள்ளியில் 126 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் இந்த பள்ளிக்கான 8 வகுப்பறையில் 4 வகுப்பறைகளை மாவட்ட கல்வி அலுவலகத்திற்கும், 2 வகுப்பறைகளை வினாத்தாள் உள்ளிட்டவைகள் வைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். 2 வகுப்பறையில் மட்டும்தான் 3 வரையிலான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். 4 மற்றும் 5-ம் வகுப்புகள் பள்ளியின் வராண்டா பகுதி மற்றும் மரத்தடியில் நடத்தப்பட்டு வந்துள்ளது.

பெற்றோர் கோரிக்கை விடுத்தநிலையில் கல்வித் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை பள்ளிக்கு வந்த குழந்தைகளின் பெற்றோர் முற்றுகையிட்டு கல்வி அலுவலகத்திற்கு அலுவலர்களை செல்லவிடாமல் மாடிப்படிகளில் உட்கார்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மண்டபம் மாவட்ட கல்வி அலுவலர் முருகம்மாள், தாசில்தார் முருகேசன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவர்களுக்கான வகுப்பறைகளை உடனடியாக ஒதுக்கித்தர வேண்டும் என்பதில் பெற்றோர் உறுதியாக இருந்தனர்.

இதைத்தொடர்ந்து 25 நாட்கள் கால அவகாசம் தருமாறும் அதற்குள் 2 வகுப்பறைகள் ஒதுக்கி தருவதாகவும் உறுதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பெற்றோர் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்