மாணவர் சேர்க்கைக்கு 20-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பூர் மாவட்டத்தில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு வருகிற 20-ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-30 18:32 GMT

திருப்பூர் மாவட்டத்தில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு வருகிற 20-ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

மாணவர் சேர்க்கை

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2022-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு வருகிற 20-ந் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச கல்வி தகுதி 8 மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச வயது வரம்பு ஆண்களுக்கு 14 முதல் 40 வயது வரையாகும். பெண்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை.

தகுதி வாய்ந்த மாணவ-மாணவிகள் அனைவரும் இந்த மாவட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற்று அரசு, பொதுத்துறை, தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் பெறலாம்.

இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்

அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ-மாணவிகளுக்கு கட்டணமின்றி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடை மற்றும் காலணி, பாடப்புத்தகங்கள், மாதந்தோறும் ரூ.750 பயிற்சி உதவித்தொகை, பஸ் பாஸ் ஆகியவை வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்பிரிவுகள் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.skilltraining.tn.gov.inஎன்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.50-ஐ டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஜி பே மூலமாக செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர திருப்பூர், தாராபுரம், உடுமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள உதவி சேவை மையத்திலும் நேரடியாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலக மாவட்ட உதவி இயக்குனரை 0421 2230500 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்