டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம்

புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இரும்பு தடுப்புகளை தகர்த்தெறிந்தனர்.

Update: 2022-11-08 18:25 GMT

டாஸ்மாக் கடை

புதுக்கோட்டையில் பழனியப்பா முக்கம் அருகே நகராட்சி கட்டிடத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் அருகே ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனை மற்றும் அரசு பள்ளிக்கூடம் உள்ளது.

பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இந்த பகுதியிலும், மருத்துவமனைக்கு கர்ப்பிணிகள் வந்து செல்லக்கூடிய இந்த இடத்தில் உள்ள டாஸ்மாக் கடையால் பாதிப்பு ஏற்படுவதாகவும், இந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்பட பல்வேறு அமைப்பு சார்பில் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடந்து வந்துள்ளது. போராட்டத்தின் போது கடை மூடப்படும் என அறிவித்தாலும், அதனை செயல்படுத்தாமல் டாஸ்மாக் அதிகாரிகள் இருந்து வந்தனர்.

பூட்டு போடும் போராட்டம்

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை இழுத்து மூடி பூட்டு போடும் போராட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி போராட்டத்தில் ஈடுபட நகர செயலாளர் சோலையப்பன் தலைமையில் நிர்வாகிகள், கட்சியினர், மாதர் சங்கத்தினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உள்ளிட்ட அமைப்பினர் இன்று புதுக்கோட்டை நகர்மன்ற வளாகம் அருகே குவிந்தனர்.

அவர்களில் சிறுவர்கள் சிலர் காந்தி, கருணாநிதி, போலீசார் வேடம் அணிந்திருந்தனர். நகர்மன்ற வளாகத்தில் இருந்து போராட்டக்காரர்கள் ஊர்வலமாக புறப்பட்டு டாஸ்மாக் கடையை நோக்கி வந்தனர். போராட்டத்தையொட்டி டாஸ்மாக் கடை முன்பும், அதற்கு முன்பாக உள்ள சாலையிலும் இரும்பு தடுப்புகள் வைத்து போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

இரும்பு தடுப்புகள்

இதற்கிடையில் போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்ற போது அவர்கள் இரும்பு தடுப்புகளை தகர்த்தெறிந்துக்கொண்டு டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். கடையின் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும் போராட்டக்காரர்கள் கடைக்கு பூட்டு போட முயன்றதால் அங்கிருந்தவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து கடையின் முன்பு அமர்ந்து கோஷம் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராகவி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பிலும் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர்.

வருவாய்த்துறையினர் பூட்டு

பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட அந்த டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடுவதாகவும், அதில் உள்ள மதுபாட்டில்களை எடுத்துக்கொள்வதாகவும் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் டாஸ்மாக் கடையின் ஷட்டருக்கு முன்பு உள்ள கதவில் பூட்டு போட்டு பூட்டினர். கடையை திறந்து மதுபாட்டில்களை எடுக்கும் போது தகவல் தெரிவிக்க டாஸ்மாக் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். அதன்பின் போராட்டம் கைவிடப்பட்டது.

மேலும் சாலை மறியல், போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 30-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்று அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த போராட்டத்தின் போது தள்ளு-முள்ளு, இரும்பு தடுப்புகள் அகற்றத்தின் போது 2 போலீசாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்து பரபரப்பானது. மூடப்பட்ட டாஸ்மாக் கடையை வேறு இடத்தில் திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்