வீட்டு மனை வழங்கக்கோரி பொதுமக்கள் மனு கொடுக்கும் போராட்டம் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

வீட்டு மனை வழங்கக்கோரி கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-12-19 18:45 GMT


விருத்தாசலம் அருகே பரவளூர் ஆதிதிராவிடர் காலனியில் 600 குடும்பங்களுக்கு மேல் உள்ளனர். அவர்கள் தங்களுக்கு வீட்டு மனை வழங்க வேண்டும் என்று பல முறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். ஆனாலும் இது பற்றி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து அவர்கள், அகில இந்திய மக்கள் சேவை முன்னேற்ற கழகத்தினருடன் இணைந்து கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டத்தை அறிவித்தனர். அதன்படி நேற்று அப்பகுதி மக்கள் 150-க்கும் மேற்பட்டவர்கள் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு வீட்டு மனை அல்லது இலவச குடியிருப்பு வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கலெக்டரிடம் மனு

போராட்டத்தில் அகில இந்திய மக்கள் சேவை முன்னேற்ற கழக நிறுவன தலைவர் தங்கம்சிகாமணி கோரிக்கைகளை விளக்கி கோஷங்களை எழுப்பினார். இதில் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.

தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்குள் ஊர்வலமாக சென்று, பொதுமக்கள் குறைகேட்பு கூட்ட அரங்கில் இருந்த கலெக்டர் பாலசுப்பிரமணியத்தை சந்தித்து மனு அளித்தனர். அவர் மனுக்களை பரிசீலனை செய்வதாக தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் செம்மங்குப்பம் காலனியில் வசிக்கும் பொதுமக்களும் அப்பகுதியை சேர்ந்த மதியழகன் தலைமையில் வந்து, கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில், செம்மங்குப்பம் காலனியில் வசிக்கும் வீடு இல்லாத, ஏழை, எளிய மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்