மாணவர் சேர்க்கை கலந்தாய்வை முறையாக நடத்தக்கோரி போராட்டம்
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை முறையாக நடத்தக்கோரி போராட்டம் நடந்தது.
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை முறையாக நடத்தக்கோரி போராட்டம் நடந்தது.
மாணவர் சேர்க்கை
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவுகளுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்றது.
இந்தக் கலந்தாய்வு முறையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விண்ணப்பித்த மாணவர்கள் பலர் கல்லூரியில் சேர்க்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த கலந்தாய்வு முறையாக நடத்தக்கோரி இடம் கிடைக்காத மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்று கல்லூரி முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகியவை சார்பில் போராட்டம் நடைபெற்றது.
கல்லூரி முன்பு அவர்கள் அமர்ந்து மாணவர் சேர்க்கை கலந்தாய்வை முறையாக நடத்த வேண்டும். வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும். இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
மாணவர்கள் ஏமாற்றம்
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மொத்தம் 2,688 இடங்களுக்கு படிப்படியாக கலந்தாய்வு நடைபெற்றது. இந்த நிலையில் விண்ணப்பித்த 520 மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படாமல் சேர்க்கை முடிவுற்றதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால் விண்ணப்பித்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த கலந்தாவை மீண்டும் முறையாக நடத்த வேண்டும்.
முதுகலை பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது. அந்த கலந்தாய்வினையும் முறையாக நடத்த வேண்டும் என்றனர்.
பேச்சுவார்த்தை
போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயற்குழு உறுப்பினர் வீரபத்திரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் தங்கராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் செல்வம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் கோபிநாத் ஆகியோரிடம் வேலூர் மண்டல கல்லூரி கல்வி இயக்குனர் காவேரியம்மாள், சென்னை மண்டல கல்லூரி கல்வி இயக்குனர் ரமணன் ஆகியோர் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் நிரப்பப்படாமல் உள்ள 136 இடங்கள் கலந்தாய்வின் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முறைகேடு நடைபெற்றிருந்தால் அது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் கோரிக்கை குறித்த மனுவை அவர்களிடம் அளித்தனர்.
பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.