தர்மபுரி:
தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம்
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த பெண்கள் நேற்று கலெக்டர் அலுவலக போர்டிகோ முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
கடந்த 2018-ம் ஆண்டு முதல் 6 ஆண்டுகளாக தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறோம். கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதியில் குப்பைகளை அகற்றுதல், கழிப்பறைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய் ஆகியவற்றை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறோம். கடந்த 4 மாதங்களாக எங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.
வாழ்வாதாரம் பாதிப்பு
இந்த நிலையில் திடீரென இனிமேல் பணிக்கு வர வேண்டாம் என்று எங்களிடம் அதிகாரிகள் கூறிவிட்டனர். இந்த பணி மூலம் கிடைத்த ஊதியத்தை வாழ்வாதாரமாக கொண்டு எங்கள் குடும்பங்களை நடத்தி வந்தோம். இப்போது திடீரென பணிக்கு வர வேண்டாம் என்று கூறி இருப்பதால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நாங்கள் தொடர்ந்து தூய்மை பணியில் ஈடுபட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு 4 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதிய நிலுவைத்தொகையை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்த கலெக்டர் சாந்தி, தூய்மை பணியாளர்களை அழைத்து கோரிக்கைகளை கேட்டறிந்தார். தூய்மை பணியாளர்களின் தர்ணா போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.