அறச்சலூர் அருகே துர்நாற்றம் வீசுவதாக தனியார் பால்பண்ணையை 4-வது நாளாக பொதுமக்கள் முற்றுகை; அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு
அறச்சலூர் அருகே துர்நாற்றம் வீசுவதாக தனியார் பால்பண்ணையை 4-வது நாளாக முற்றுகையிட்ட பொதுமக்களுடன் அமைச்சர் சு.முத்துசாமி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
அறச்சலூர்
அறச்சலூர் அருகே துர்நாற்றம் வீசுவதாக தனியார் பால்பண்ணையை 4-வது நாளாக முற்றுகையிட்ட பொதுமக்களுடன் அமைச்சர் சு.முத்துசாமி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
தனியார் பால் பண்ணை
அறச்சலூர் அருகே உள்ள ராசாம்பாளையத்தில் ஒரு தனியார் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த பால்பண்ணையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், குரங்கன் ஓடை தண்ணீர் மாசடைவதாவும் கடந்த 4 நாட்களாக அப்பகுதி மக்கள் பால் பண்ணையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து நேற்று காலை ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் போராட்டம் நடத்தியவர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்ைத நடத்தினார். அதன்பின்னர் சம்பந்தப்பட்ட பால் பண்ணைக்கு சென்றும் பார்வையிட்டார். பிறகு பொது மக்களிடம் இதுகுறித்து நாளை (திங்கட்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறினார். ஆனாலும் போராட்டம் தொடர்ந்து நடந்தது.
அமைச்சர் பேச்சுவார்த்தை
இந்தநிலையில் நேற்று மாலை அமைச்சர் சு.முத்துசாமி போராட்டம் நடத்தியவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் அமைச்சரிடம், பால்பண்ணை தொடங்கி 4 மாதங்கள் ஆகிறது. ஆனால் கடந்த 14 நாட்களாக கடுமையான துர்நாற்றம் வருகிறது. மேலும் குரங்கன் ஓடையும் மாசுபட்டு விட்டது என்றனர்.
அதற்கு அமைச்சர் உங்கள் புகார் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் சம்பந்தப்பட்ட பால் பண்ணைக்கு சென்று அங்குள்ள தொட்டிகளில் கழிவுகள் தேக்கி ைவக்கப்பட்டுள்ளதா? என்று பார்வையிட்டார். அப்போது பால்பண்ணை நிர்வாகிகளிடம் கழிவுநீரை சுத்தப்படுத்தி முறையாக வெளியேற்றவேண்டும் என்று எச்சரித்தார். மேலும் குரங்கன் ஓடைக்கும் சென்று பார்த்தார். அமைச்சர் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பொதுக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.