ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்குள் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்; குப்பை சேகரிக்கும் பணி பாதிப்பு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்குள் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக குப்பை சேகரிக்கும் பணி பாதிக்கப்பட்டது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்குள் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக குப்பை சேகரிக்கும் பணி பாதிக்கப்பட்டது.
தூய்மை பணியாளர்கள்
ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. மாநகராட்சி பகுதியில் தினமும் 250 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சி சார்பில் ஒப்பந்த அடிப்படையில் 1,200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தினக்கூலியாக தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் 500-க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்களும் தூய்மை பணியில் ஈடுபடுகின்றனர். இவர்கள் வார்டு வாரியாக பிரிக்கப்பட்டு வீடு வீடாக சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரித்து வருகிறார்கள்.
உள்ளிருப்பு போராட்டம்
இந்தநிலையில் ஒப்பந்த அடிப்படையில் தினக்கூலிகளாக வேலை செய்யும் தூய்மை பணியாளர்களை தனியாருக்கு ஒப்பந்த முறையில் விடுவதை கைவிட வேண்டும். சேகரிக்கும் குப்பை அளவுக்கு ஊதியம் வழங்கும் டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். 480 நாட்கள் பணியாற்றிய தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 2023 -2024-ம் ஆண்டு அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஊதிய உயர்வு நாளொன்றுக்கு ரூ.18- ஐ அனைத்து தின கூலி பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும்.
மாதந்தோறும் முதல் நாளில் சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஏராளமானோர் நேற்று பணிகளை புறக்கணித்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் மாநகராட்சி அலுவலகத்துக்குள் சென்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதைத்தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், மேயர் நாகரத்தினம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் சின்னசாமி, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் மற்றும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில் உடன்பாடு ஏற்படாததால் தொழிற்சங்க நிர்வாகிகள் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையாளரை சந்தித்து கோரிக்கைகளை தெரிவித்தனர். அவருடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இதுகுறித்து ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் சின்னசாமி கூறுகையில், "எங்களது கோரிக்கைகள் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகளை எழுதி கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டோம். வருகிற 12-ந் தேதிக்குள் கொடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். மேலும், தூய்மைப்படுத்தும் பணியை தனியார் மயமாக்கக்கூடாது என்ற கோரிக்கை தொடர்பாக வருகிற 12-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதுவரை தனியார் மயமாக்கப்படுத்துவதற்கான ஏலம் விடக்கூடாது என்று கூறிஉள்ளோம்", என்றார்.
குப்பை சேகரிக்கும் பணி பாதிப்பு
தூய்மை பணியாளர்களின் போராட்டம் காரணமாக ஈரோடு மாநகராட்சி பகுதியில் குப்பைகள் சேகரிக்கும் பணி பாதிக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் நிரந்தர பணியாளர்கள் குப்பைகளை சேகரித்தனர். குப்பைகளை சேகரிக்க தூய்மை பணியாளர்கள் வராததால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.
இந்த போராட்டத்தால் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.