சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தவர்களை கண்டித்து ஓசூரில் பொதுமக்கள் மனித சங்கிலி போராட்டம்

Update: 2023-06-06 19:30 GMT

ஓசூர்

ஓசூர் அருகே சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தவர்களை கண்டித்து பொதுமக்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மனித சங்கிலி போராட்டம்

ஓசூர் அருகே ஒன்னல்வாடி கிராமத்தில் லேஅவுட்டில் 80 வீடுகள் உள்ளன. இதனிடையே அப்பகுதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் சிமெண்டு சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து சாலை பணிக்காக லாரியில் ஜல்லிகற்கள் கொண்டு சென்றதை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தவர்களை கண்டித்தும், சாலை அமைக்க வலியுறுத்தியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் ஓசூர்-தர்மபுரி சாலையில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த், வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன், தாசில்தார் சுப்பிரமணி மற்றும் டவுன் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்