ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
போராட்டம்
ஊராட்சி செயலாளர்களுக்கு பணிவிதிகளை காலதாமதம் இன்றி வெளியிட வேண்டும். விடுபட்ட உரிமைகளை உடனடியாக வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கணினி உதவியாளர்களின் பணி வரன்முறை ஆணைகளை வெளியிட வேண்டும். அவர்கள் அனைவருக்கும் உடனடியாக உயர்த்தப்பட்ட விகிதத்தில் ஊதியத்தினை நிர்ணயம் செய்ய வேண்டும்.
தூய்மை பாரத இயக்க வட்டார, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் ஊதியத்தினை உயர்த்தி பணிவரன் முறைப்படுத்த வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு அனைத்து வட்டாரங்களுக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடத்தை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் சிறுவிடுப்பு எடுத்து போராட்டம் நடத்தப்பட்டது.
321 பேர் பங்கேற்பு
இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,870 பணியாளர்களில் 321 பேர் சிறுவிடுப்பு எடுத்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். மீதமுள்ள 1,505 பேர் பணிக்கு வந்தனர். குறிப்பாக மல்லசமுத்திரம், வெண்ணந்தூர், பள்ளிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் அதிக அளவில் பணியாளர்கள் சிறுவிடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் வெறிச்சோடி இருந்தன. அங்கு வழக்கமாக நடைபெறும் பணிகளும் பாதிக்கப்பட்டன.