நகராட்சி அலுவலகத்தை பூட்டி தரையில் அமர்ந்து கவுன்சிலர் போராட்டம்
நகராட்சி அலுவலகத்தை பூட்டி தரையில் அமர்ந்து கவுன்சிலர் போராட்டம் நடத்தினார்
சிவகங்கை
சிவகங்கை நகராட்சி 15-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் அன்புமணி. இவர் சிவகங்கை அ.ம.மு.க. நகர செயலாளராகவும் உள்ளார். நேற்று இவர் சிவகங்கை நகராட்சி அலுவலகத்தின் கதவுகளை பூட்டி அலுவலகத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
சிவகங்கை நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு போதுமான இடமில்லாமல் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் நகராட்சி தலைவர் தலைமையில் நகர்மன்ற உறுப்பினர்கள் சென்று கேட்டும் இதுவரை இடம் எதுவும் ஒதுக்கப்படவில்லை. இதனால் நகர் முழுவதும் தெருக்களில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இதுதவிர நகரில் அனைத்து தெருக்களுக்கும் முறையாக குடிதண்ணீர் வழங்குவது கிடையாது. சாக்கடைகள் சுத்தம் செய்வது கிடையாது. இது குறித்து அதிகாரிகளிடம் கூறினாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை. எனவே நகராட்சி அலுவலகத்தை பூட்டி காத்திருக்கும் போராட்டம் நடத்துகின்றேன் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளேன் என்றார். பின்னர் அதிகாரிகள் கூறியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டார்.