வாய்ப்பாடி ஊராட்சி அலுவலகத்தில் துணை தலைவி உள்ளிருப்பு போராட்டம்

வாய்ப்பாடி ஊராட்சி அலுவலகத்தில் துணை தலைவி உள்ளிருப்பு போராட்டம்

Update: 2022-07-08 21:36 GMT

சென்னிமலை

சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது வாய்ப்பாடி ஊராட்சி. இங்கு தி.மு.க.வை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் ஊராட்சி துணை தலைவராக இருந்து வருகிறார். வாய்ப்பாடி ஊராட்சியில் செயல்படுத்திய அரசு திட்டங்கள் குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் அடிக்கடி விஜயலட்சுமி விவரம் கேட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் ஊராட்சி துணை தலைவரான விஜயலட்சுமியிடம் இருந்து காசோலையில் கையெழுத்து போடுவதற்கான அதிகாரத்தை நீக்க வேண்டும் என நேற்று வார்டு உறுப்பினர்கள் மூலம் தீர்மானம் போட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆவேசம் அடைந்த விஜயலட்சுமி நேற்று காலை 11 மணி அளவில் வாய்ப்பாடி ஊராட்சி அலுவலகத்திற்குள் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹேமலதா, குணசேகரன் ஆகியோர் வந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விஜயலட்சுமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது நாளை மறுநாள் (திங்கட்கிழமை) இதுகுறித்து சென்னிமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் காயத்ரி இளங்கோ தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு சுமுகமாக தீர்வு ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து மாலை 4 மணி அளவில் துணை தலைவி விஜயலட்சுமி உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டார். பெண் ஊராட்சி துணை தலைவி 5 மணி நேரம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்