"நெல்லையில் பைக் ரேஸ் நடத்தினால் கடும் நடவடிக்கை" - துணை போலீஸ் கமிஷனர்

“நெல்லையில் புத்தாண்டை முன்னிட்டு பைக் ரேஸ் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Update: 2022-12-27 20:36 GMT

நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நம்பர் பிளேட் இல்லாத வாகனங்கள், ஏர் ஹாரன் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை நிறுத்தி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் பொருத்தப்பட்ட ஏர் ஹாரன்கள் அகற்றப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து மாநகர போலீஸ் துணை கமிஷனர் (கிழக்கு) சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை மாநகர பகுதிகளில் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் நம்பர் பிளேட் இல்லாத வாகனங்களை பயன்படுத்துவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 5 நாட்களில் மட்டும் 250-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அதே போல் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஏர் ஹாரன்களை பயன்படுத்துபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நெல்லை மாநகரில் புத்தாண்டை முன்னிட்டு பைக் ரேஸ் நடத்தினாலோ, அதில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்