உலா வந்த காட்டெருமைகள்
கொடைக்கானல் நகரில் காட்டெருமைகள் உலா வந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
கொடைக்கானல் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டெருமைகள் கூட்டமாக குடியிருப்பு பகுதியில் உலா வருகின்றன. மேலும் பொதுமக்களை தாக்கி வருகிறது. இந்நிலையில் நகரில் எப்போதும் பரபரப்பாகவும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூடும் இடங்களான அண்ணாசாலை, பஸ் நிலையம், 7 ரோடு சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் நேற்று மாலை 4 மணி அளவில் 10-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கூட்டமாக உலா வந்தன. இதைக்கண்ட பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
மேலும் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் அச்சத்துடன் சாலையில் நிறுத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 1 மணி நேரம் போராடி காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.