கனரக வாகனங்களுக்கு ஆன்லைனில் அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்யாவிட்டால் வேலைநிறுத்தம்-லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் பேட்டி
கனரக வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்யாவிட்டால் வேலை நிறுத்தம் செய்வோம் என்று சேலத்தில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ் தெரிவித்துள்ளார்.
போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவரும், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவருமான தன்ராஜ் தலைமையில் மாநில இணை செயலாளர் சுப்பிரமணி, சேலம் மாவட்ட செயலாளர் குமார், பொருளாளர் செந்தில்குமார் உள்பட 150-க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமாரை சந்தித்து கனரக வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் ஆன்லைன் மூலமாக விதிக்கப்படும் அபராத தொகையை ரத்து செய்வது தொடர்பாக மனு அளித்தனர்.
சம்மேளன தலைவர் பேட்டி
இதுகுறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கனரக வாகனங்களுக்கும், கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட மக்கள் பயன்படுத்தும் அனைத்து வாகனங்களுக்கும் போக்குவரத்து விதிமீறலுக்கு ஆன்லைனில் அபராதம் விதிக்கப்படுகிறது. இதில் பல்வேறு குளறுபடிகள் நடக்கிறது. அதாவது, சாலையோரம், பெட்ரோல் விற்பனை நிலையம், பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களின் பதிவு எண்களை போலீசார் குறித்து வைத்துக்கொண்டு என்ன குற்றம் என்று பதிவிடாமல் பொதுவான குற்றம் என அபராதம் விதிக்கப்படுகிறது.
அபராதம்
அதேசமயம், சாலை விதிகளை பின்பற்றவில்லை, சீட் பெல்ட் அணியவில்லை, ஹெல்மெட் போடவில்லை என்ற முரணான காரணங்களுக்காக லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு விதிக்கப்படும் அபராதங்களை காலாண்டு வரி, தகுதிச்சான்று, பர்மிட் பெறும்போது மொத்தமாக செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுகிறோம்.
ஹெல்மெட் போடவில்லை என்று லாரி டிரைவர்களுக்கும், சீட் பெல்ட் அணியவில்லை என்று மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்லும் நபருக்கும் குளறுபடியான முறையில் அபராதம் விதிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம்?. போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதிப்பதை நாங்கள் குற்றம் சொல்லவில்லை. ஆனால் ஆன்லைன் அபராதம் என வந்தபிறகு தவறுதலாக அதிகப்படியான அபராதம் விதிக்கப்படுகிறது.
போராட்டம்
போக்குவரத்து போலீசார் முறையாக லாரிகளை நிறுத்தி டிரைவர் தவறு செய்திருந்தால் அவரிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு அபராதம் விதிக்கட்டும். அதைவிடுத்து ஆன்லைனில் தவறாக அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண்டும். எனவே, எங்களது கோரிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்தில் எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம். அதேசமயம், எங்களது கோரிக்கையை இதன்பின்னரும் ஏற்காவிட்டால் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயற்குழுவை கூட்டி அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும். போராட்டம் என்பது வேலை நிறுத்தமாக கூட இருக்கலாம். இதுபற்றி பின்னர் முடிவு செய்வோம்.
ஆன்லைன் அபராத தொகையை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், போலீஸ் அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்களை வழங்கியுள்ளனர்.
இவ்வாறு தன்ராஜ் கூறினார்.