ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் 4-வது நாளாக ஒப்பந்த பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்- கருப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்றனர்
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் 4-வது நாளாக ஒப்பந்த பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் 4-வது நாளாக ஒப்பந்த பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காத்திருப்பு போராட்டம்
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்கள் அரசு அறிவித்த ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 29-ந் தேதி முதல் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் ஆஸ்பத்திரியின் வளாகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இரவில் கொட்டும் பனியிலும் ஒப்பந்த பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் 4-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.
மாவட்ட நிர்வாகம் அறிவித்த ஊதியமான நாள் ஒன்றுக்கு ரூ.707 வீதம் மாதந்தோறும் ரூ.21 ஆயிரத்து 260 வழங்க வேண்டும்.
தூய்மை பணியாளர்களுக்கு ஆஸ்பத்திரியில் உடை மாற்ற, ஓய்வெடுக்க அறை ஒதுக்க வேண்டும். ஒப்பந்த முறைப்படி 3 சிப்ட் அடிப்படையில் பணி வழங்க வேண்டும். வேலை நேர பணி அட்டை வழங்க வேண்டும். வார விடுமுறையை சுழற்சி அடிப்படையில் வழங்க வேண்டும். இலவச சீருடை, பாதுகாப்பு உடைகள் வழங்க வேண்டும். தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் பணியாற்றுபவர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய பிரதான கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
பேச்சுவார்த்தை தோல்வி
ஒப்பந்த பணியாளர்களின் போராட்டம் காரணமாக அரசு ஆஸ்பத்திரி சுகாதார பணிகளில் பல்வேறு வேலைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே இந்த போராட்டத்தை வாபஸ் பெற வைக்க அதிகாரிகள் முயற்சி செய்து வருகிறார்கள். நேற்று இரவு தாசில்தார் பாலசுப்பிரமணியம், அரசு ஆஸ்பத்திரி நிர்வாகிகள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் ஒப்பந்த பணியாளர்கள் தொடர்ந்து தங்களது போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
நேற்று அவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினார்கள்.