ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் வேலைநிறுத்தம்

16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-13 18:41 GMT

வேலை நிறுத்தம்

ஊரக வளர்ச்சித்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தேர்வு நிலை, சிறப்பு நிலை உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும் ஊராட்சி செயலாளர்களுக்கும் வழங்க வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை பிரிக்க வேண்டும்.

100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் கணினி உதவியாளர்களுக்கு பணி வரன் முறைப்படுத்த வேண்டும். பிரதம மந்திரி வீடு கட்டும் திட்ட செயலாக்கம் காரணமாக ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு உள்ள ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று தமிழகம் முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணிகள் பாதிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் மொத்தம் 1,740 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் நேற்று 202 பேர் பணிக்கு வரவில்லை. 48 பேர் நீண்ட விடுப்பில் உள்ள நிலையில், மீதமுள்ள 1,490 பேர் நேற்று பணிக்கு வந்து இருந்தனர். இதனால் தினசரி பணிகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும் கிராமபுறங்களில் குடிநீர் வினியோகம், சுகாதாரம் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் அலுவலர்கள், ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊராட்சி துறை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்