பொது இடங்களில் மருத்துவ கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை: சித்திரை திருவிழாவுக்கு 56 இடங்களில் மருத்துவ முகாம்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
பொது இடங்களில் மருத்துவ கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சித்திரை திருவிழாவையொட்டி 56 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடுகள் செய்து இருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
பொது இடங்களில் மருத்துவ கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சித்திரை திருவிழாவையொட்டி 56 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடுகள் செய்து இருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சித்திரை திருவிழா
மதுரை சித்திரை திருவிழாவில் செய்யப்பட வேண்டிய மருத்துவ ஏற்பாடுகள் குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து அவர் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை சித்திரை திருவிழாவில் 15 லட்சம் பக்தர்கள் ஒரே நேரத்தில் கூட இருக்கின்றனர். எவ்வித தொற்று நோய் பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள சுகாதாரத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
திருவிழா நடக்கும் பகுதிகளில் 1580 மாநகர பணியாளர்கள் மற்றும் 160 சிறப்பு பணியாளர்கள், 1800 அயல் நகராட்சி பணியாளர்கள் தூய்மைப்பணியில் ஈடுபட இருக்கின்றனர். 22 துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் தூய்மைப்பணிகளை மேற்பார்வையிட இருக்கின்றனர். பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வினியோகிக்க 23 சிறப்பு குழுக்கள் அமைத்து, குடிநீரில் குளோரின் அளவு சரிபார்க்கப்படும். கோடை மழை பெய்து வருவதால், கொசு ஒழிக்கும் பணியும் நடக்கிறது. தங்கும் விடுதிகள், மடங்கள் சுகாதாரமாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. உணவகங்கள், அன்னதானம் செய்யும் இடங்கள், குளிர்பானங்கள் விற்பனை செய்யும் இடங்கள், பழங்கள் விற்பனை செய்யும் இடம் என அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் அடங்கிய 7 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடக்கிறது.
56 இடங்களில் மருத்துவ முகாம்
திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதியை கொடுக்கும் வகையில் 56 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த முகாம்களில் 168 டாக்டர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் இருப்பார்கள்.
கடந்த ஆண்டு 20 இடங்களில்தான் மருத்துவ முகாம்கள் நடந்தன. 32 இடங்களில் தயார் நிலையில் ஆம்புலன்சு சிறப்பு சேவை வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. தடை செய்யப்பட்டுள்ள பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் பயன்பாடுகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்..
வாட்ஸ்-அப் புகார்
சித்திரை திருவிழாவை முன்னிட்டு, அன்னதானம் வழங்கும் நபர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பம் பெற்று, மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் அனுமதி பெற வேண்டும். இதுபோல், உணவகங்கள், குளிர்பான கடைகள் செயல்படவும் அனுமதி பெற்றிருக்க வேண்டும். இதில் ஏதேனும் புகார்கள் இருந்தால், 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கலாம். இந்த எண் குறித்து 30 இடங்களில் விளம்பர பதாகைகளும் வைக்கப்படுகின்றன.
தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு 500-ஆக இருந்த நிலையில், தற்போது 300-ஆக குறைந்துள்ளது. உயிரிழப்பு இல்லை.
தனியார் மருத்துவமனைக்கு நோட்டீஸ்
தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். மதுரையில் அவ்வாறு செயல்பாடாத தனியார் மருத்துவமனைக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சட்ட நடவடிக்கை எடுக்க நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது.
மருத்துவத்துறையினர், தெரிந்தே பொது இடங்களில் மருத்துவ கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எந்த நிறுவனம் நடந்து கொண்டாலும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். போலி டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 3, 4 மாதங்களில் 200-க்கும் அதிகமாக போலி டாக்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.