பயிர் அறுவடை மகசூல் பரிசோதனை பணியில் இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை
நாகை மாவட்டத்தில் பயிர் அறுவடை பரிசோதனை பணியில் இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அருண் தம்புராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் பயிர் அறுவடை பரிசோதனை பணியில் இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அருண் தம்புராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அறுவடை மகசூல் பரிசோதனை பணி
நாகை மாவட்டத்தில் நடப்பாண்டில் சிறப்பு பருவத்தில் நெல் பயிரில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மகசூலை கணக்கிடும் அறுவடை பரிசோதனை பணி ஒவ்வொரு கிராமத்திலும் தலா 4 இடங்களில் புள்ளியியல் துறையினால் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் சில கிராமங்களில் பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்ள வேளாண், வருவாய், புள்ளியியல் துறை மற்றும் பயிர் காப்பீடு நிறுவன அலுவலர்கள் வரும் போது அக்கிராமத்து விவசாயிகள் அத்திட்டத்தை செயல்படுத்த பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துவதாக தகவல் வந்த வண்ணம் உள்ளன.
இடையூறு செய்தால் வழக்குப்பதிவு
பயிர் அறுவடை பரிசோதனை செய்யும் இடத்தில் சம்பந்தப்பட்ட சர்வே எண்ணின் சாகுபடிதாரரும், வேளாண்மைத் துறை, புள்ளியியல் துறை, வருவாய்த்துறை மற்றும் பயிர் காப்பீட்டு நிறுவன அலுவலர்கள் மட்டுமே இருக்க அனுமதிக்கப்படுவர். இதைத் தவிர வேறு எந்தவொரு அலுவலரோ, விவசாயிகளோ அல்லது தனிநபர்களோ இருந்தால் பயிர் அறுவடை பரிசோதனை நடத்த இடையூறு ஏற்படும்.
இதனால், கிராமத்திற்கு பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்க இயலாத நிலை ஏற்படும்.பயிர் அறுவடை பரிசோதனைக்கு ஏதாவது இடையூறுகள் விளைவித்தால் அத்தகைய நபர்கள் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்படும்.
ஒத்துழைப்பு தர வேண்டும்
இதனை கருத்தில் கொண்டு தங்கள் கிராமங்களில் நடைபெறவுள்ள பயிர் அறுவடை பரிசோதனை பணி சரியான முறையில் நடத்திட அனைத்து தரப்பினரும், தகுந்த ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.