சுற்றுலா தலங்களில் நுழைவு கட்டணம் கூடுதலாக வசூலித்தால் கடும் நடவடிக்கை-கலெக்டர் எச்சரிக்கை

சுற்றுலா தலங்களில் நுழைவு வரியாக பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராமநாதபுரம் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-08-05 18:45 GMT

சுற்றுலா தலங்களில் நுழைவு வரியாக பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராமநாதபுரம் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புகார்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் மத வழிபாட்டு தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் பஸ்கள் மற்றும் கார்களில் வந்து செல்கின்றனர். இவ்வாறு வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகளிடம் உள்ளாட்சி நிர்வாகத்தின் சார்பில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்படுவதாகவும், வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு உரிய ரசீதுகள் வழங்கப்படுவதில்லை என பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது.

நுழைவு கட்டணம்

அந்த விசாரணை அறிக்கைகளின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் வாகன நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும் இடங்களில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நடைமுறையில் இருக்கும் வரை மட்டுமே வாகன நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். நுழைவு வாயில் அருகில் மக்களுக்கு தெளிவாக தெரியும் வண்ணம் வாகன நுழைவு கட்டண விவரம் குறித்த பேனர் வைக்கப்பட வேண்டும். வாகன நுழைவு கட்டண வசூல் செய்யும் நபர் தனது பெயர் பொதுமக்களுக்கு நன்கு தெரியும் வகையிலான பெயர் பட்டையை சட்டையில் அணிந்திருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் தவிர வேறு யாரும் வாகன நுழைவு கட்டண வசூலில் ஈடுபடக்கூடாது.

கடும் நடவடிக்கை

வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு கையால் எழுதி ரசீது வழங்கும் நடைமுறை முற்றிலும் தடை செய்யப்படுகிறது. நுழைவு கட்டணம் வசூல் செய்யும் நபர்கள் மின் ரசீது வழங்க ஏதுவாக வசூலிப்பாளர்களுக்கு கையடக்க ரசீது வழங்கும் கருவியை வழங்க உத்தரவிடப்படுகிறது. கையடக்க ரசீது வழங்கும் கருவியில் உள்ளிடப்பட்ட தொகை, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பினால் தீர்மானிக்கப்பட்ட தொகையாக இருக்க வேண்டும். மேலும் எந்த சூழ்நிலையிலும் உள்ளாட்சி அமைப்பால் தீர்மானிக்கப்பட்ட தொகையை விட அதிக தொகை வசூலிக்கக்கூடாது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்