கலெக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்-தலைமை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

வழக்கு விசாரணையின்போது ஆஜராகாமல் உதவியாளரை அனுப்பிய கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2022-06-25 19:42 GMT


வழக்கு விசாரணையின்போது ஆஜராகாமல் உதவியாளரை அனுப்பிய கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மேல்முறையீட்டு வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் பகுதியைச் சேர்ந்த சிலர் பத்மநாபபுரம் கோர்ட்டில் கடந்த 1986-ம் ஆண்டு சிவில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் பத்மநாபபுரம் கோர்ட்டு கடந்த 1991-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர், மாவட்ட வன அதிகாரி ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2004-ம் ஆண்டு அப்பீல் மனு தாக்கல் செய்தனர். பல ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை நீதிபதி வேல்முருகன் விசாரித்தார்.

அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இந்த வழக்கு கடந்த 17-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, 24.6.2022 அன்று கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர், மாவட்ட வன அதிகாரி ஆகியோர் நேரில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி 24-ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட வன அதிகாரி நேரில் ஆஜராகியிருந்தார். கலெக்டர் ஆஜராகவில்லை. இதற்கு பதிலாக அவர் தனது தனி உதவியாளரை அனுப்பியுள்ளார்.

கலெக்டர் மீது கடும் நடவடிக்கை

இந்த மேல்முறையீட்டு மனுதாரர்கள் சார்பில் ஆஜரான அரசு வக்கீலும் முறையான பதில் அளிக்கவில்லை.

எனவே இந்த கோர்ட்டின் உத்தரவை முறையாக பின்பற்றாத கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் மீது தமிழக அரசின் தலைமை செயலாளர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது எடுத்த நடவடிக்கை குறித்து இந்த கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இதேபோல இந்த மேல்முறையீட்டு வழக்கில் ஆஜராகும் அரசு வக்கீலுக்கு பதிலாக மற்றொரு வக்கீலை நியமிக்க வேண்டும். இந்த வழக்கு ஜூலை மாதம் 7-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்