அரசு, தனியார் டவுன் பஸ் மீது கடும் நடவடிக்கை

காட்பாடி ரவுண்டானா வழியாக செல்லாத அரசு, தனியார் டவுன் பஸ் மீது கடும் நடவடிக்கை என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-03-11 17:40 GMT

காட்பாடி-பாகாயம் வழியாக இயக்கப்படும் அரசு, தனியார் பஸ்களில் சில பஸ்கள் காந்திநகருக்கு (ரவுண்டானா) வராமல் சில்க்மில் பகுதியில் இருந்து நேராக ஓடைபிள்ளையார் கோவில் வழியாக சென்று விடுவதாகவும், அதனால் காந்திநகரில் பஸ்சுக்காக வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது என்று பயணிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்தனர்.

அதன்பேரில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உரிய நடவடிக்கை எடுக்கும்படி வட்டார போக்குவரத்து அலுவலருக்கு உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) வெங்கடேசன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் சில்க்மில் பகுதியில் இன்று திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட அரசு, தனியார் பஸ்கள் காட்பாடி ரவுண்டானா வழியாக செல்கிறதா? என்று கண்காணித்தனர். அந்த சமயம் ஒரு அரசு, தனியார் டவுன் பஸ்கள் காட்பாடி ரவுண்டானா வழியாக செல்லாமல் நேரடியாக காட்பாடிக்கு செல்வது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த பஸ்களை நிறுத்தி சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. அனுமதிக்கப்பட்ட வழித்தடமான காட்பாடி ரவுண்டானா வழியாக பஸ்சை இயக்க வேண்டும்.

இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அதிகாரிகள் எச்சரித்தனர்.

சோதனை அறிக்கை வழங்கப்பட்ட பஸ் டிரைவரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்தல், பஸ்சின் பெர்மிட் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை கலெக்டர் மேற்கொள்வார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்