சமையல் பணியாளரை தேர்வு செய்ய கையூட்டு பெற்றால் கடும் நடவடிக்கை
காலை உணவு திட்டத்தில் சமையல் பணியாளரை தேர்வு செய்ய கையூட்டு பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர்கள் விழுப்புரம் சி.பழனி, கள்ளக்குறிச்சி ஷ்ரவன்குமார் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் கலெக்டர் சி.பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின்கீழ் பள்ளி குழந்தைகளுக்கு உணவு சமைக்கும் பணியை மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு, ஊராட்சி, பகுதி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்கள் கீழ்கண்ட நிபந்தனைகளை பின்பற்றி தேர்வு செய்யப்பட வேண்டும்.
இதற்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவமுள்ள உறுப்பினராக இருத்தல் வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் அதே கிராம ஊராட்சியில், நகர்ப்புற பகுதியில் வசிப்பிடமாக கொண்டு வசிப்பவராக இருக்க வேண்டும். காலை உணவை சமைப்பதற்கும் பரிமாறுவதற்கும் தேர்வு செய்யப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உணவு தயாரித்தலில் போதுமான அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும், சுய உதவிக்குழு உறுப்பினரின் குழந்தைகள் அதே பள்ளியில் தொடக்க வகுப்பில் (1 முதல் 5-ம் வகுப்பு வரை) படிக்க வேண்டும். உறுப்பினர் குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 10-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். மலைப்பாங்கான, தொலைதூர மற்றும் பழங்குடியின கிராமங்களில் 10-ம் வகுப்பு வரை பயின்ற மகளிர் சுய உதவிக்குழு இல்லையெனில் 8-ம் வகுப்பு வரையாவது படித்திருக்க வேண்டும்.
விதிமுறைகள்
தேர்வு செய்யப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தங்கள் பெயரில் இணையதள வசதியுடன் கூடிய ஆண்ட்ராய்டு செல்போன் வைத்திருக்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கடந்த 3 ஆண்டுகளில் பெற்ற கடன்களை தவணை தவறாது நிலுவையின்றி செலுத்தியிருப்பவராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு போதுமான நிதி இருப்பை கொண்டிருக்க வேண்டும். காலை உணவுத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு குழு போதுமான நிதி மூலதனத்தை கொண்டிருக்க வேண்டும்.
மேலும் இத்திட்டத்தில் உணவு சமைக்கும் மையத்தில் சமையல் பணிக்கு ஈடுபடும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பணியானது முற்றிலும் தற்காலிக பணியாகும். இப்பணியானது நிரந்தரம் அல்ல. உணவு சமைக்கும் மையத்திற்கு சமையல் பணியில் ஈடுபடும் மகளிரின் மகன் அல்லது மகள் சம்பந்தப்பட்ட தொடக்கப்பள்ளியில், தொடக்க வகுப்பில் (1 முதல் 5-ம் வகுப்பு வரை) படிக்க வேண்டும். தொடக்க வகுப்பை விட்டு அவருடைய மகன் அல்லது மகள் மேல்படிப்பிற்கு செல்லும்போது அவருக்கு பதிலாக வேறொரு தகுதியுடைய மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் உணவு சமைக்கும் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்.
கையூட்டு பெற்றால் நடவடிக்கை
முற்றிலும் தற்காலிக பணியிடத்தில் உணவு சமைக்கும் மையத்திற்கு தேர்வு செய்யப்படும் நபரிடம் கையூட்டு, பணம் கேட்பதாக ஏதேனும் புகார்கள் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.