பழங்குடியின மக்களின் நிலத்தை அபகரித்தால் கடும் நடவடிக்கை
பழங்குடியின மக்களின் நிலங்களை வெளிநபர்கள் அபகரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்:
பழங்குடியின மக்களின் நிலங்களை வெளிநபர்கள் அபகரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
நிலங்களை அபகரித்தால்...
குமரி மாவட்டத்தில் காணி பழங்குடியின மக்கள் 47 காணி குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வன உரிமைச்சட்டம், 2006 -ன் படி நில உரிமை வழங்கப்பட்டு வருகிறது. இச்சட்டத்தின் கீழ் பழங்குடி மக்களுக்கு வழங்கப்படும் நிலமானது வேறு நபர்களுக்கு குத்தகைக்கோ, தானமாகவோ, கிரையமாகவோ அல்லது வேறு எந்த வகையிலும் மாற்றத்தக்கதல்ல. நில உரிமை பெற்ற பழங்குடி மக்களின் வாரிசுகள் மட்டுமே இந்த நிலத்தை பெற்றோர்களுக்கு பிறகு உரிமை கொண்டாட இயலும்.
இந்த நிலையில் சட்ட விதிகளுக்கு முரணாக வெளி நபர்கள் பழங்குடி மக்களின் அனுபவத்திலுள்ள நிலங்களை வாய்மொழி குத்தகை பாட்டம் பெற்று விவசாயம் செய்து வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இவ்வாறு விவசாயம் செய்து வரும் நிலங்களை பழங்குடியின மக்களுக்கு மீண்டும் திரும்ப ஒப்படைக்காமல் அதிக தொகை கேட்டு அந்த மக்களை மிரட்டுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
சட்டப்படி நடவடிக்கை
காணி பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் வேறு நபர்கள் அனுமதியின்றி நுழைவது தமிழ்நாடு வனச்சட்டம், 1882 -ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும் பழங்குடி மக்களின் நிலங்களை சட்டத்திற்கு புறம்பாக அபகரிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே இது போன்ற செயல்களில் எவரும் ஈடுபட கூடாது என்று எச்சரிக்கப்படுவதுடன் இந்த அறிவிப்பிற்கு பின் இச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க வனத்துறை, வருவாய்த்துறை பணியாளர்கள், போலீசார் மற்றும் பழங்குடி மக்கள் கொண்ட குழுக்கள் விரைவில் அமைக்கப்படும். இதுதொடர்பாக பழங்குடி மக்கள் தங்களது புகார்களை கலெக்டர் அலுவலகத்திலோ, மாவட்ட வன அலுவலகத்திலோ தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.