அரசு பள்ளிகளில் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை -அமைச்சர் எச்சரிக்கை
அரசு பள்ளிகளில் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தஞ்சாவூர்,
தமிழகத்தில் பள்ளிகள் வருகிற 7-ந் தேதி திறக்கப்படுகிறது.
ஆசிரியர்கள் இந்த ஆண்டை விட கூடுதலாக மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளி வாகனங்களின் செயல்பாடுகள் குறித்து, அந்தந்த மாவட்டங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை என கூற முடியாது. அனைத்து பள்ளிகளிலும் கூடுதல் பொறுப்புடன் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அரசு பள்ளிகளில், இந்த ஆண்டுக்காக கடந்த மே மாதத்தில் மட்டும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர். பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு எத்தனை மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்கிற முழு விவரம் தெரிய வரும்.
மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு
முதல்-அமைச்சரின் வானவில் மன்றம், புதுமைப்பெண் உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்களால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 11 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். வட மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
2,381 பள்ளிகளில் இதுவரை 40 ஆயிரம் மாணவர்கள் எல்.கே.ஜி., யு.கே.ஜி.யில் சேர்ந்துள்ளனர். குடோனில் இருந்து புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்படுகின்றன. சில இடங்களில் ஆசிரியர்கள் தங்களின் விருப்பத்தின்பேரில், குடோனில் இருந்து புத்தகங்களை எடுத்து செல்லுகின்றனர். யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிதி நிலைமைக்கு தகுந்தாற்போல் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
கடும் நடவடிக்கை
அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் வகுப்புக்கு ஏற்கனவே ரூ.200 வசூல் செய்யப்பட்டது. தற்போது அந்த தொகையும் வசூல் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ.3 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவர்களிடம் ஆசிரியர்கள் எதுவும் தனியாக கட்டணம் வசூல் செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.