பொள்ளாச்சியில் ரேஷன் அரிசி கடத்தினால் கடும் நடவடிக்கை-போலீசார் எச்சரிக்கை
ரேஷன் அரிசியை கடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொள்ளாச்சியில் நடந்த கூட்டத்தில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
பொள்ளாச்சி
ரேஷன் அரிசியை கடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொள்ளாச்சியில் நடந்த கூட்டத்தில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
கூட்டம்
உணவு கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஆபாஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி ஆகியோரது உத்தரவின் பேரில் உணவு பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளுக்கு பொள்ளாச்சியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று கூட்டம் நடைபெற்றது. இதற்கு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமை தாங்கி பேசினார்.
கூட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல், பதுக்கல் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன், குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் மற்றும் நுகர்பொருள் வாணிப கழக கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகள், போலீசார் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறியதாவது:-
கடும் நடவடிக்கை
பொதுமக்கள் பயன்பெறுவதற்கு விலையில்லா ரேஷன் அரிசி திட்டம் செயல்பட்டு வருகிறது. ஆனால் பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசி வாங்கி கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. மேலும் சிலர் ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை பதுக்கி வைத்து கடத்துவதாக புகார் வந்தது. எனவே ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தல், பதுக்கலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு ரேஷன் அரிசி நேரடியாக சென்று பயன் அடைகின்றனரா? என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும் யாராவது ரேஷன் அரிசியை பதுக்கி கடத்துவது குறித்து தெரிந்தால் உடனே உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கடத்தல், பதுக்கலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.