கைத்தறி ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்தால் கடும் நடவடிக்கை

கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட விசைத்தறி உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்வதோடு விசைத்தறி கூடத்திற்கும் சீல் வைக்கப்படும் கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Update: 2023-09-08 17:30 GMT

கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட விசைத்தறி உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்வதோடு விசைத்தறி கூடத்திற்கும் சீல் வைக்கப்படும் கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-

முதல் தகவல் அறிக்கை பதிவு

கைத்தறி ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985 சட்டப்பிரிவு (5) -ன்படி சட்டத்தை மீறிய செயலாகும். இது கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் பிரிவு 10 (ஏ)-ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும். விசைத்தறி நெசவாளர்களுக்கு கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் -1985 குறித்து செய்யாறு, ஆரணி, கீழ்பென்னாத்தூர் ஆகிய ஒன்றியங்களில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட 11 ரகங்கள் குறித்தும், அதனை விசைத்தறியில் உற்பத்தி செய்தால் மேற்கொள்ளப்படும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் 42 விசைத்தறி கூடங்களில் 304 விசைத்தறிகளின் மீது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 4 விசைத்தறியாளர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

விசைத்தறிக் கூடங்களில் திடீர் ஆய்வின்போது கைப்பற்றப்பட்ட 15 சேலை மாதிரிகள் தரப்பரிசோதனை ஆய்வுக்காக கோவையில் உள்ள டெக்ஸ்டைல் கமிட்டிக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த ஆய்வறிக்கையில் விதிமீறல்கள் இருப்பின் சம்பந்தப்பட்ட விசைத்தறியாளர்கள் மீதுசட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

விசைத்தறி கூடத்திற்கு 'சீல்'

கைத்தறி ஆணையரால் நியமனம் செய்யப்பட்டுள்ள பறக்கும் படை குழுவின் மூலம் விசைத்தறி கூடங்களில் 'திடீர்' ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

ஆய்வின் போது கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட விசைத்தறி உரிமையாளர் மீது காவல் துறை மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் அதிகபட்சமாக 6 மாத கால சிறை தண்டனையோ அல்லது அதிகபட்சமாக விசைத்தறிக்கு ரூ.5 ஆயிரம் அபராதமோ அல்லது 2-ம் சேர்ந்தோ தண்டனையாக வழங்கப்படும்.

இனி வரும் காலங்களில் இவற்றையும் மீறி கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட விசைத்தறி உரிமையாளர் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்வதோடு விசைத்தறி கூடத்திற்கும் 'சீல்' வைக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்