குற்றசெயல்களில் ஈடுபடுவோரிடம் தொடர்பு வைத்திருந்தால் கடும் நடவடிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குற்றசெயல்களில் ஈடுபடுவோரிடம் தொடர்பு வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசாருக்கு சூப்பிரண்டு மோகன்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்

Update: 2023-01-30 18:45 GMT

கள்ளக்குறிச்சி

சாராயம், கஞ்சா வேட்டை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாராயம், கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தாராளமாக நடைபெற்று வருகிறது. இதை தடுக்க அந்தந்த பகுதி போலீசாரும், தனிப்படை போலீசாரும் அதிரடி சோதனை நடத்தி வியாபாரிகள் மற்றும் கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பு உளுந்தூர்பேட்டை அருகே ஒரு கிராமத்தில் உள்ள கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக அதன் உரிமையாளரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 4 கிலோ அளவிலான புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை கண்டும் காணாமல் இருப்பதற்காக உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலைய முதல் நிலை காவலர் ஒருவர் கடைக்காரரிடம் ரூ.3 ஆயிரம் மாமூல் வாங்கி இருப்பதும் தெரியவந்தது. இதை அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் சம்பந்தப்பட்ட போலீஸ்காரரை பணியிடை நீக்கம்செய்து உத்தரவிட்டார்.

கடும் நடவடிக்கை

இந்த நிலையில் மாவட்டத்தில் சாராயம், கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்களிடம் தொடர்பு வைத்திருந்தால் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா, சாராயம் காய்ச்சுதல், கடத்துதல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவர் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளிடம் தொடர்பு வைத்துக்கொண்டு காவல் துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஈடுபட்டாலோ அல்லது அவர்களுக்கு துணை போனாலோ சம்மந்தப்பட்ட போலீஸ்காரர்கள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்