பாலில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை -அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை

பாலில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

Update: 2023-05-18 18:46 GMT

சென்னை,

சென்னை ஆவின் தலைமை அலுவலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆவினில் தினமும் 45 லட்சம் லிட்டர் பால் கொள்ளளவை கையாளும் திறன் உள்ளது. மாநிலத்தின் தேவையை அடிப்படையாக கொண்டு பார்த்தால், தினசரி 70 லட்சம் லிட்டர் பால் கொள்ளளவை கையாளும் திறன் வேண்டியது உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் தினமும் 70 லட்சம் லிட்டர் பால் கொள்ளளவை கையாளும் திறனை ஏற்படுத்த கட்டமைப்பு வசதிகளை உடனடியாக மேற்கொள்ள இருக்கிறோம்.

தினமும் 70 லட்சம் லிட்டர் பால் கொள்ளளவை கையாளும் திறனை ஏற்படுத்தும் போது அதற்கு நிகராக பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது உள்ளது. இதற்காக விவசாயிகளுக்கு 2 லட்சம் கறவை மாடுகளை வழங்க உள்ளோம்.

கொள்முதல் விலையை உயர்த்துவது உள்ளிட்ட பால் உற்பத்தியாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

கடும் நடவடிக்கை

ஆவினை பொறுத்தமட்டில் பொருளாதார சிக்கல் எதுவும் இல்லை. இதனால், புதிய முயற்சிகளை மேற்கொள்ள நிதி தடையாக இருக்காது. தற்போதுள்ள சூழ்நிலையில் பால் உற்பத்தியை பெருக்க வேண்டியது உள்ளது.

உரிய அனுமதி இல்லாமல் பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களை நடத்தி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறைந்த விலையில் பாலை கொடுக்க வேண்டும் என்பதற்காக தவறான செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் வந்துள்ளன.

பால் என்பது மிக முக்கியமான உணவுப்பொருள். எந்தவித வேதிப்பொருட்கள் கலப்படமும் இல்லாமல் பால் கிடைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை.

எனவே, பாலில் கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆவின் பொருட்களின் தரத்தை உயர்த்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ளோம்.

காலதாமதமின்றி பால் வினியோகம்

உணவுப்பொருள் அதிகாரிகள் மூலம் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆவின் மூலம் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்வது குறித்தும் முடிவெடுப்போம். எந்தவித காலதாமதமும் இன்றி பொதுமக்களுக்கு பால் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பால் வினியோகத்தை குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது பால்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குனர் டாக்டர் சுப்பையன் உடன் இருந்தார்.

இதைத்தொடர்ந்து ஆவின் பொதுமேலாளர்கள், அனைத்து மாவட்ட துணை பதிவாளர்களுடன் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்