வன்முறைக்கான பதிவுகளை பதிவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை

சமூக ஊடகங்களில் வன்முறையை தூண்டும் விதத்தில் பதிவுகள் பதிவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாதாந்திர குற்றத்தடுப்பு கூட்டத்தில் ஹரிகிரண் பிரசாத் தெரிவித்தார்.

Update: 2023-04-06 22:01 GMT

நாகர்கோவில்:

சமூக ஊடகங்களில் வன்முறையை தூண்டும் விதத்தில் பதிவுகள் பதிவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாதாந்திர குற்றத்தடுப்பு கூட்டத்தில் ஹரிகிரண் பிரசாத் தெரிவித்தார்.

மாதாந்திர குற்றத்தடுப்பு கூட்டம்

குமரி மாவட்ட போலீஸ் சார்பில் மாதாந்திர குற்றத்தடுப்பு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பேசியதாவது:-

கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதை புழக்கம் மாவட்டத்தில் அறவே இல்லாதவாறு கண்காணிக்க வேண்டும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குற்றச்செயல்கள் அதிகரிக்காமல் இருக்க போலீசார் துரிதமாக செயல்பட வேண்டும். ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் எந்தவிதமான பாரபட்சமும் இருக்கக் கூடாது. தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபருக்கு சரித்திர பதிவேடு தொடங்கப்பட வேண்டும்.

சமூக ஊடகங்களில் வன்முறை..

ரவுடிகளுக்கு நன்னடத்தை பிணை வாங்கப்பட்டு அவர்களின் நடவடிக்கை கட்டுப்படுத்தப்பட வேண்டும். தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட வேண்டும். போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இழப்பீடு பெற்றுத் தர வேண்டும்.

சமூக ஊடகங்களில் வன்முறையை தூண்டும் விதத்தில் பதிவுகள் பதிவிடுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் மற்றும் சைபர் மோசடிகளில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க அந்தந்த போலீஸ் நிலைய எல்லைக்குள் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வாகனங்கள் ஆய்வு

இதில் அரசு குற்ற வக்கீல்கள், மருத்துவ அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள், தீயணைப்புத்துறையினர், சிறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் குற்ற சம்பவங்களில் சிறப்பாக பணியாற்றி விரைந்து கைது நடவடிக்கையை மேற்கொண்ட போலீசாருக்கும், சைபர் கிரைம் பிரிவில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கும், புலனாய்வு பிரிவில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களுக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

முன்னதாக நாகர்கோவில் ஆயுதப்படை முகாமில் போலீசாரின் வாகனங்களை மாதாந்திர ஆய்வு நடத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கலந்து கொண்டு வாகனங்களை ஆய்வு செய்தார். மேலும் அந்த வாகனங்களில் சில இருசக்கர வாகனங்களை ஓட்டி பார்த்தார். வாகனங்களில் ஏதேனும் குறைகள் உள்ளதா? என போலீசாரிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்