அதிவேகமாக வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் சூப்பிரண்டு

தூத்துக்குடிமாவட்டத்தில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-02-26 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை அதிவேகமாக ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

அதிவேகமாகமாக ஓட்டினால்...

தூத்துக்குடி மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வாகனம் ஓட்டுதல், வாகன பந்தயத்தில் ஈடுபடுபவர்கள், மதுபோதையில் வாகனம் ஒட்டுதல், இருசக்கர வாகனங்களில் சைலன்சர்களை நீக்கிவிட்டு அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்களை உபயோகித்து வாகனம் ஓட்டுதல், அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை ஒலிக்கவிட்டு வாகனம் ஓட்டுதல், தடை செய்யப்பட்ட ஹேண்டில்பார் மாற்றி ஓட்டுதல், இருசக்கர வாகனங்களில் செல்லும்போது தலைகவசம் அணியாமல் செல்வது, நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது சீட் பெல்ட் அணியாமல் செல்வது, இருசக்கர வாகனங்களில் 3 பேராக செல்வது ஆகிய போக்குவரத்து வீதிமிறல்களில் ஈடுபடுவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

அபராதம்

திருத்தப்பட்ட மோட்டார் வாகனச்சட்டப்படி, மோட்டார் வாகனங்களில் சாலைகளில் பந்தயங்களில் ஈடுபட்டால் முதல் முறை மீறுபவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், 2-வது துறை மீறுபவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், இருசக்கர வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்களைப் பொருத்தி அதிக ஒலி எழுப்பிச் செல்பவர்கள் மற்றும் வாகனங்களில் ஹேண்டில்பார் போன்றவற்றை மாற்றி வாகனங்களை பயன்படுத்துவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் முதல் முறை ரூ.1,000-ம், 2-வது முறை ரூ.10 ஆயிரமும், மதுபோதையில் வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், இன்சூரன்சு இல்லாமல் வாகனங்கள் ஓட்டினால் முதல் முறை ரூ.2 ஆயிரமும், 2-வது முறை ரூ.4 ஆயிரமும், இருசக்கர வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட 2 நபர்களுக்கு மேல் பயணம் செய்தால் ரூ.1000 அபராதமும் விதிக்கப்படும்.

இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் ஓட்டினாலும், 4 சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினாலும் ரூ.1,000 அபராதமும், பதிவு செய்யப்படாத வாகனங்களை பயன்படுத்தினால் முதல் முறை ரூ.2 ஆயிரத்து 500-ம் இரண்டாவது முறை பயன்படுத்தினால் ரூ.5 ஆயிரம் அபராதமும் அபாயகரமாகவும், அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வாகனம் ஓட்டினால் முதல் முறை ரூ.1,000-மும், இரண்டாவது முறை ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்