விதிமீறல் கட்டிடங்களுக்கு காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

விதிமீறல் கட்டிடங்களுக்கு காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-04-12 20:28 GMT


விதிமீறல் கட்டிடங்களுக்கு காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

கட்டிடத்தை மூட வேண்டும்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை அடுத்த சண்முகபுரம் ஊராட்சித்தலைவர் சித்திரவேல், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மேலசண்முகபுரம் பகுதியில் 7 ஆயிரம் சதுர அடியில் தனியார் நிறுவனத்தினர் சார்பில் கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதற்கு உரிய அனுமதி பெறவில்லை.

இந்த சட்டவிரோத கட்டுமானத்திற்கு உரிய கட்டணம் மற்றும் அபராதத் தொகையை செலுத்த வேண்டும் அல்லது கட்டிடத்தை மூட வேண்டும் என்றும், இந்த கட்டிடத்தின் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட வேண்டும்.

இதேபோல கீழசண்முகபுரத்தில் 55 ஆயிரம் சதுர அடியில் குளிர்பதன கிடங்கு கட்டப்பட்டு உள்ளது. இந்த கட்டிடத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

அதிகாரிகள் ஆஜர்

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, 55 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்ட கட்டிடத்தை அனுமதியின்றி கட்டியுள்ளனர். அதற்கு மின் இணைப்பும் வழங்கப்பட்டு உள்ளது. இது எவ்வாறு நடந்தது என்பதற்கு உடனடி தீர்வு காண வேண்டும். எனவே இதுகுறித்து உரிய விளக்கம் அளிப்பதற்காக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் டாக்டர் செந்தில்ராஜ், விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அதிகாரி முத்துக்குமார் உள்ளிட்டோர் நீதிபதிகள் முன்பு ஆஜராகினர்.

பின்னர் அவர்கள், சம்பந்தப்பட்ட கட்டிடங்களையும் வரன்முறை செய்து அனுமதிக்கக் கோரி அதிகாரிகளிடம் விண்ணப்பம் செய்துள்ளனர். அந்த விண்ணப்ப மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

கடும் நடவடிக்கை

இதையடுத்து நீதிபதிகள், சம்பந்தப்பட்ட மனுக்களை அதிகாரிகள் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். எதிர்காலத்தில் விதிமீறல் கட்டிடங்கள் இல்லாத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விதிமீறல் கட்டிடங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்