மதுரையில் விதிகளை மீறும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை

விதிகளை மீறும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என்றும், இதன்மூலம்ரூ.2 கோடியை அபராதமாக வசூலித்துள்ளோம் என்றும் மதுரை ஐகோர்ட்டில் போலீஸ் கமிஷனர் பதில் அளித்துள்ளார்.

Update: 2022-09-10 20:00 GMT

விதிகளை மீறும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என்றும், இதன்மூலம்ரூ.2 கோடியை அபராதமாக வசூலித்துள்ளோம் என்றும் மதுரை ஐகோர்ட்டில் போலீஸ் கமிஷனர் பதில் அளித்துள்ளார்.

ஆட்டோக்களுக்கு தனி நிறுத்தம்

மதுரை மாவட்ட மினி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் மைதீன் பாஷா, கடந்த 2017-ம் ஆண்டில் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு இடங்களில் ஆட்டோக்களை நிறுத்தி, பயணிகளை ஏற்றி, இறக்குகின்றனர். இதனால் பயணிகள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர். பல நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. இந்த விபத்துகளில் சிக்கி, மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, இவற்றை தவிர்க்க ஆட்டோவில் பயணிகளை ஏற்றி, இறக்க தனி இடம் ஒதுக்கித்தர உத்தரவிட வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஆட்டோக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை தவிர மற்ற இடங்களில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்க தடை விதிக்க வேண்டும். குறிப்பாக பஸ் நிலையங்கள் மற்றும் பஸ் நிறுத்தம் பகுதிகளில் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

கட்டுப்படுத்த நடவடிக்கை

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, இதுகுறித்து மதுரை மத்திய வட்டார போக்குவரத்து அதிகாரி மற்றும் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் பதில் அளிக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மதுரை மத்திய வட்டார போக்குவரத்து அதிகாரி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையில் விதி மீறல் தொடர்பாக 1,412 ஆட்டோக்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதுதவிர நிர்ணயித்ததை விட கூடுதலாக பயணிகளை ஏற்றியதாக 694 ஆட்டோக்களின் மீது வழக்கு பதியப்பட்டது. 813 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றின் உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் ஆட்டோக்களின் உரிமையாளர்களிடம் இருந்து அபராதமாக ரூ.9 லட்சத்து 26 ஆயிரத்து 850 வசூலிக்கப்பட்டது. பயணிகளின் சிரமம் இன்றி பயணம் செய்யவும், விதிமீறலை கட்டுப்படுத்தவும் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என கூறப்பட்டு இருந்தது.

ரூ.2 கோடி அபராதமாக வசூல்

இதேபோல, மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், விதிமுறைகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையிலான காலத்தில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக 15,251 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும், மீட்டர் இல்லாமல் ஆட்டோக்களை இயக்கியதாக 10,286 வழக்குகளும், அதிக பயணிகளை ஏற்றியதாக 27,751 வழக்குகளும், ஆட்டோக்களில் இருக்கைகளை மாற்றி அமைத்ததாக 2,354 வழக்குகளும், பிற வகையில் 1,00,826 வழக்குகள் என மொத்தம் 1,56,468 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் அபராத தொகையாக ரூ.2 கோடியே 14 லட்சத்து 54 ஆயிரத்து 50-ஐ வசூலிக்கப்பட்டு உள்ளது. மதுரை மாநகர் முழுவதும் 113 ஆட்டோ நிறுத்தும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. முறையான அனுமதியுடன் 1,911 ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. விதிமுறைகளை மீறும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்