வன விலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை
வன விலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
பாலக்கோடு
பாலக்கோடு வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் மான், காட்டுப்பன்றி, குரங்கு, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்தநிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் கிராமத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. மேலும் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை தின்று சேதப்படுத்துகின்றன. இதேபோல் கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து வரும் யானைகளாலும் விவசாய பயிர்கள் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க விவசாயிகள் சிலர் வனத்துறைக்கு தெரியாமல் தங்களது நிலத்தை சுற்றி மின்வேலி அமைக்கின்றனர். இதனால் யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் அவற்றில் சிக்கி உயிரிழப்பது வாடிக்கையாக உள்ளது.
இந்தநிலையில் மின்வேலியில் சிக்கி வன விலங்குகள் உயிரிழப்பதை தடுக்க பாலக்கோடு வனச்சரகர் நடராஜன், வனவர் முனுசாமி மற்றும் வனத்துறையினர் பாலக்கோடு பகுதியில் விழிப்புணர்வு நோட்டீசு வழங்கினர். அப்போது அவர்கள் விளை நிலங்களை சுற்றி மின்வேலி அமைக்கக்கூடாது. வன விலங்குகளை வேட்டையாடக்கூடாது என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர். மேலும் இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கைவிடுத்தனர்.