கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்தால் கடும் நடவடிக்கை

தர்மபுரி மாவட்டத்தில் கைத்தறிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சாந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-08-26 15:37 GMT

தர்மபுரி மாவட்டத்தில் கைத்தறிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சாந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கைத்தறிக்கு ஒதுக்கீடு

கைத்தறி நெசவாளர்களை பாதுகாக்க மத்திய அரசு கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்தை இயற்றி செயல்படுத்தி வருகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களை எல்லையாக கொண்ட உதவி அமலாக்க அலுவலர் அலுவலகம் சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டப்பிரிவு 5-ன் கீழ் ஒரு சில தொழில்நுட்ப குறிப்பீடுகளுடன் 11 வகை ரகங்கள் கைத்தறிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985-ன்படி தண்டனைக்குரிய செயலாகும். கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் விசைத்தறியாளர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படும்.

சிறை தண்டனை

மேலும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு 6 மாத சிறை தண்டனை அல்லது தறி ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும். எனவே தர்மபுரி மாவட்ட விசைத்தறியாளர்கள் கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்வதை தவிர்த்து அபராதம் மற்றும் சிறை தண்டனையில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்