பேட்டையில் தெருநாய்கள் பிடிக்கப்பட்டன
நெல்லை பேட்டையில் சாலையில் சுற்றித்திரிந்த தெருநாய்கள் பிடிக்கப்பட்டன.
பேட்டை:
நெல்லை பேட்டையில் 20-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகளில் தெருநாய்கள் சுற்றித்திரிந்தன. சில நாய்கள் தெருவில் வருவோரையும், போவோரையும் பார்த்து குரைப்பதால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அச்சத்துடன் சென்று வந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில், மாநகர நல அலுவலர் அனிகுயின் அறிவுறுத்தல்படி, சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில் 20-வது வார்டு கவுன்சிலர் மன்சூர் முன்னிலையில், மாநகராட்சி ஊழியர்கள் 20-வது வார்டுக்கு உட்பட்ட எம்.ஜி.பி. சன்னதி தெரு, எம்.என்.பி. சன்னதி தெரு, காதர் ஒலிவா பள்ளிவாசல் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையில் சுற்றித்திரிந்த தெருநாய்களை வலைவீசி பிடித்து சென்றனர். அவை மேலப்பாளையம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வெறிநாய்களுக்கான நோய் தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்யப்பட்டு, 3 நாட்கள் கால்நடை மருத்துவமனை பராமரிப்பில் கண்காணிக்கப்பட்டு, பின்னர் மீண்டும் வெளியில் விடப்படும் என்று மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.