தெருநாய்களை சுருக்கு கம்பியால் கழுத்தை நெரித்து பிடித்ததால் பரபரப்பு

திருச்சி மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய்களை சுருக்கு கம்பியால் கழுத்தை நெரித்து பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் மீது புளுகிராஸ் அமைப்பினர் போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-09-20 19:53 GMT

திருச்சி மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய்களை சுருக்கு கம்பியால் கழுத்தை நெரித்து பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் மீது புளுகிராஸ் அமைப்பினர் போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

தெருநாய்கள் தொல்லை

திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு அதிகரித்து வருகிறது. சாலையில் செல்பவர்களை நாய்கள் துரத்துவது, கடிப்பது உள்ளிட்டவை தினந்தோறும் நடைபெற்று வருகிறது. அது மட்டுமில்லாமல் தெருக்களில் ஓடி ஆடி விளையாடும் குழந்தைகளை நாய்கள் துரத்தி கடிப்பது வாடிக்கையாகிவிட்டது.

இதனால் குழந்தைகளின் பெற்றோர்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். இதில், திருச்சி கைலாசபுரத்தில் நாய்கள் அதிகம் சுற்றித்திரிவதாகவும், அவை பொதுமக்களை விரட்டி கடிப்பதாகவும் பொதுமக்கள் கடந்த 6 மாதத்துக்கும் மேலாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து வந்தனர்.

சுருக்கு கம்பி போட்டு பிடிப்பு

இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாநகராட்சி அதிகாரிகள் சிலரை ஏற்பாடு செய்து கைலாசபுரம் பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க ஏற்பாடு செய்தனர். அவர்கள் வலைகளை வீசி பிடிக்காமல், சுருக்கு கம்பிகளை பயன்படுத்தி, அவற்றை நாய்களின் கழுத்தில் மாட்டி பிடித்தனர்.

அப்போது, அவர்கள் நாய்களை கால்களை இழுத்து பிடித்தும், கழுத்தில் சுருக்கு கம்பிகளை இறுக்கியும், துன்புறுத்தி சரக்கு ஆட்டோவில் தூக்கி வீசி ஏற்றிச்சென்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆனது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

புளுகிராஸ் அமைப்பினர் புகார்

இதைத்தொடர்ந்து திருச்சி புளு கிராஸ் அமைப்பின் துணைத்தலைவர் ராகவன் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். அதில், திருச்சி கைலாசபுரம் அக்பர் சாலை அருகே உள்ள இமானுவேல் நகர் பகுதியில் 6 பேர் கொண்ட கும்பல், தடை செய்யப்பட்ட சுருக்கு கம்பியை பயன்படுத்தி தெருநாய்களை கொடூரமான முறையில் பிடித்து அவற்றை சரக்கு வாகனத்தில் தூக்கி வீசினர். அந்த நாய்களை என்ன செய்தார்கள்? அவற்றின் கதி என்ன? என்று தெரியவில்லை. எனவே வாயில்லா ஜீவன்களை காப்பாற்றவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகிறேன் என்று கூறப்பட்டு இருந்ததுடன் அது தொடர்பான படங்களும் இணைக்கப்பட்டு இருந்தன.

மேலும் அந்த புகார் மனுவின் நகல்கள், தமிழக முதல்-அமைச்சருக்கும், சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை பதிவாளருக்கும், மத்திய மந்திரி மேனகா காந்திக்கும் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்