திருப்பூர்
திருப்பூரில் நூல் விலை உயர்வை தடுக்கத்தவறிய மத்திய அரசை கண்டித்து ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 60 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரெயில் மறியல் போராட்டம்
பனியன் தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளாக விளங்கும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரியும், பின்னலாடை தொழிலை பாதுகாக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நேற்று திருப்பூர் ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் பஷீர் அகமது தலைமை தாங்கினார். தொடர் நூல் விலையேற்றத்தால் பனியன் தொழில் அழிவை நோக்கி செல்கிறது. நூல் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். பஞ்சு பதுக்கலை முழுவதுமாக ஒழிக்க வேண்டும், உள்நாட்டு பனியன் உற்பத்திக்கு தேவையான நூல் உற்பத்தியாளர்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் பஞ்சு, நூலை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தள்ளு-முள்ளு
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் இதாயத்துல்லா, மன்சூர் அகமது, தெற்கு மாவட்ட தலைவர் ஹாரிஸ் பாபு, வர்த்தக அணியின் மாவட்ட தலைவர் பாபு, எஸ்.டி.டி.யு. வடக்கு மாவட்ட தலைவர் முஜிபுர் ரகுமான், தெற்கு மாவட்ட தலைவர் முகமது பாரூக் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ரெயில் நிலைய நுழைவுவாசலில் காவல்துறையினர் வைத்திருந்த தடுப்பை மீறி உள்ளே செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும்,போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது.
பின்னர் தடுப்பையும் மீறி ரெயில் நிலையத்துக்குள் புகுந்தனர். அதன்பின்னர் தண்டவாளத்தில் அமர்ந்தும், படுத்தும் மறியலில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் ரெயில் எதுவும் வரவில்லை. வடக்கு போலீசார், ரெயில்வே பாதுகாப்பு போலீசார், ரெயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தாலும் அவை அனைத்தையும் மீறி தண்டவாளத்தில் அமர்ந்தும், படுத்தும் மறியல் செய்தனர்.
60 பேர் கைது
மாநகர போலீஸ் துணை கமிஷனர் அபினவ்குமார், உதவி கமிஷனர் அனில்குமார், ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் முருகன், ரெயில்வே போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தண்டவாளத்தில் இருந்து தூக்கினார்கள். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்தால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.