தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை எதிெராலியாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
எச்சரிக்கை கூண்டு
வங்கக்கடலில் ஒடிசா மாநிலம் பாலாசோர் பகுதியில் இருந்து 310 கிலோ மீட்டர் தூரத்திலும், மேற்கு வங்க மாநிலம் திகா பகுதியில் இருந்து 250 கிலோ மீட்டர் தூரத்திலும், சாகர் தீவு பகுதியில் இருந்து 210 கிலோ மீட்டர் தூரத்திலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த தாழ்வுநிலை மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு இடையே கரையை கடந்து சென்று வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இதனை தொடர்ந்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், தொலைதூர காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதை சுட்டிக்காட்டும் விதமாக நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதன்மூலம் கப்பல்கள் எச்சரிக்கையுடன் பயணத்தை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பலத்த காற்று
மேலும் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதே போன்று தென்மேற்கு வங்கக்கடல், தமிழக கடலோர பகுதிகளில் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்றும், இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.