வேதாரண்யம் மீனவர்கள்8-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை
மோகா புயல் எதிரொலியாக வேதாரண்யம் மீனவர்கள் நேற்று 8-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
மோகா புயல் எதிரொலியாக வேதாரண்யம் மீனவர்கள் நேற்று 8-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
மோகா புயல்
வங்கக்கடல் பகுதியில் தற்போது உருவாகி உள்ள புயலுக்கு 'மோகா' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால் விசைப்படகு மீனவர்கள் ஏராளமானோர் தற்போது மீன்பிடிக்க செல்லவில்லை. சிறிய வகை படகான பைபர் படகு மீனவர்கள் மட்டுமே தற்போது மீன்பிடிக்க சென்று வருகிறார்கள். புயல் எதிரொலியாக பைபர் படகு மீனவர்களும் கடலுக்கு சென்று மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் புயல் எச்சரிக்கையால் நேற்று 8-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
மீன் பிடிக்க செல்லாததால் வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
உள்வாங்கி காணப்படும் கடல்
ஆறுகாட்டுத்துறையில் இருந்து வேதாரண்யம் கடற்கரை வரை நேற்று 3-வது நாளாக கடல் உள்வாங்கி காணப்பட்டது. 500 அடி தூரம் வரை கடல் உள்வாங்கி உள்ளது. கடலில் உள்ள சேறு கடற்கரை முழுவதும் தேங்கி உள்ளது. கடல் வெகு தூரம் உள்வாங்கி இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கடல் உள்வாங்குவதும் பின்னர் சகஜ நிலைக்கு திரும்புவதும் வழக்கமான ஒன்றாக இருந்தாலும், தற்போது அதிக தூரம் கடல் உள்வாங்கி உள்ளது. மோகா புயலின் தாக்கத்தால் இவ்வாறு கடல் உள்வாங்கி இருக்கலாம் என மீனவர்கள் தெரிவித்தனர்
படகுகள் நிறுத்தி வைப்பு
வேதாரண்யம் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புயல் கரையை கடந்த பின்பு தான் மீன்பிடிக்க செல்வோம் என மீனவர்கள் தெரிவித்தனர்.