அணைக்கட்டுக்கு செல்லும் டவுன்பஸ் டிரைவர் இல்லாததால் நிறுத்தம்
குடியாத்தத்தில் இருந்து அணைக்கட்டுக்கு இயக்கப்படும் டவுன் பஸ்டிரைவர் இல்லாமல் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
பஸ் நிறுத்தம்
குடியாத்தத்தில் இருந்து அணைக்கட்டுக்கு பள்ளிகொண்டா, கந்தநேரி வழியாக டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. தினமும் 8 முறை குடியாத்தத்தில் இருந்து அணைக்கட்டுக்கு சென்றுவந்தது. இந்தநிலையில் சில நாட்களாக இரவு 9 மணிக்கு குடியாத்தத்தில் இருந்து அணைக்கட்டுக்கு இயக்கப்படும் பஸ் பேருந்து அடிக்கடி நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் அணைக்கட்டில் இருந்து குடியாத்தத்திற்கு வந்த டவுன் பஸ் மீண்டும் அணைக்கட்டுக்கு செல்லாமல் டிரைவர் உடல்நிலை சரியில்லை என காரணம் காட்டி பஸ்சை குடியாத்தம் அரசு போக்குவரத்து பணிமனையில் நிறுத்திவிட்டு மருத்துவமனைக்கு சென்றுவிட்டார்.
பொதுமக்கள் அவதி
மாலையிலாவது இயக்குவார்கள் என்று பொதுமக்கள் காத்திருந்தனர் ஆனாலும் டவுன்பஸ் இயக்கவில்லை. இரவு நேரத்தில் கடைசி பஸ்சையாவது இயக்குவார்கள் என வேலை முடிந்து ஊருக்குசெல்ல இரவில் காத்திருந்தனர். அப்போதும் பஸ் வராமல் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் குடியாத்தத்தில் இருந்து அணைக்கட்டு வரை உள்ள கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.
இது குறித்து பயணிகள் கூறுகையில் டிரைவர் இல்லாததால் பஸ் நிறுத்தப்பட்ட சம்பவம் அதிகாரிகளின் மெத்தனப் போக்கை காட்டுகிறது. மாற்று டிரைவர் ஏற்பாடு செய்து எங்களுக்கு பஸ் இயக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் அலட்சியத்தால் பஸ் இயங்கவில்லை என தெரிவித்தனர். உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.