2 நாட்களில் 11 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 நாட்களில் 11 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-24 18:42 GMT

11 குழந்தை திருமணங்கள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் மூலம் கடந்த 19, 20 ஆகிய தேதிகளில் மாவட்டத்தில் உள்ள அரக்கோணத்தில் ஒருகுழந்தை திருமணமும், சோளிங்கரில் 7, நெமிலியில் 2, காவேரிப்பாக்கத்தில் 1 என மாவட்டம் முழுவதும் 11 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அப்போது குழந்தை திருமணம் செய்தால் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதுடன், கைது செய்யப்படுவார்கள். அவர்கள் ஜாமீனில் வெளியே வர முடியாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு அறிவுறைகள் வழங்கப்பட்டு தற்போது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களை குழந்தைகள் நல காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உதவி எண்

குழந்தை தொழிலாளர்கள், பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகும் குழந்தைகள், குழந்தை திருமணங்களுக்கு ஆளாகும் குழந்தைகள், காணாமல் போன குழந்தைகள், கொடுமைக்கு உள்ளாகும் குழந்தைகள், மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு உதவிட 24 மணிநேர அவசர உதவிக்கு சைல்டு லைன் எண் 1098-க்கும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து உதவி எண் 181-க்கும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்