நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோவிலில் கல்கருட சேவை

நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோவிலில் கல்கருட சேவை

Update: 2023-04-01 19:53 GMT

பங்குனி திருவிழாவையொட்டி நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோவிலில் கல்கருட சேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

கல்கருட சேவை

கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலில் சீனிவாசப்பெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவத்தலங்களில் ஒன்றானதும், பிரசித்தி பெற்ற கல்கருட தலமாகவும் போற்றப்படுகிறது. இங்கு ஆண்டு தோறும் பங்குனி திருவிழா 11 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் பங்குனி திருவிழா தொடங்கியது. இக்கோவிலில் குடமுழுக்கு திருப்பணிக்காக பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் கொடியேற்றத்தை தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலாவுக்கு பதிலாக பிரகார உலாவாக நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று மாலை 6 மணிக்கு பிரசித்தி பெற்ற கல்கருட சேவை நடைபெற்றது. அப்போது கோவிலுக்குள் திரளான பக்தர்கள் கருட பகவானை தரிசனம் செய்ய காத்து நின்றனர்.

அலங்கார தரிசனம்

கருட பகவான் வாகன மண்டபம் எழுந்தருளும் நிகழ்ச்சியின் போது பக்தர்கள் வெள்ளத்தில் நீந்தி வருவது போன்று காட்சியளித்தது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இரவு கல்கருட பகவான் அலங்கார தரிசனம் நடைபெற்றது. வருகிற 6-ந்தேதி உற்சவர் பெருமாள் தாயார் கோ ரதத்தில் பிரகார உலா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பிரபாகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்