ஆருத்ரா நிதி நிறுவன ஏஜெண்டுகளின் வீடுகள் மீது கல்வீசி தாக்குதல்

நெமிலியை அடுத்த சயனபுரம் கிராமத்தில் வசிக்கும் ஆருத்ரா நிதி நிறுவன ஏஜெண்டுகளின் வீடுகள் மீது முதலீட்டாளர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது ஒருவரை மரத்தில் கட்டிப்போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-06-07 12:11 GMT

நிதி நிறுவன மோசடி

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஆருத்ரா நிதி நிறுவன கிளை தொடங்கப்பட்டது. இதில் ரூ.1 லட்சம் கட்டினால் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வட்டி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் நெமிலி சுற்றுவட்டார பகுதிகளான பனப்பாக்கம், சயனபுரம், நெமிலி, கீழ்வீதி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 300-க்கும் மேற்பட்டோர் ரூ.200 கோடி அளவில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.

ஆனால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு இந்த நிறுவனம் மோசடி செய்ததாக கூறி மூடி சீல்வைக்கப்பட்டது. மேலும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் நிதி நிறுவன நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர்.

கல்வீசி தாக்குதல்

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு நெமிலி கிளையின் ஏஜெண்டுகளான யோகானந்தம் மற்றும் சதிஷ் ஆகியோரின் வீட்டின் மீது சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் கதவு கண்ணாடி, மோட்டார் சைக்கிள் ஆகியவை சேதமடைந்தன.

மேலும் ஏஜெண்டு யோகானந்தம் என்பவரின் வீட்டில் தாக்கியபோது அங்கு அவரது சகோதரர் சதிஷ் இருந்துள்ளார். அவரை முதலீட்டாளர்கள் மரத்தில் கட்டிப்போட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக் விரைந்து சென்று முதலீட்டாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சதிஷ் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்