கோவில் விழாவில் இரு பிரிவினரிடையே மோதல் கல்வீச்சு
நடுவீரப்பட்டில் கோவில் விழாவில் இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டு கல்வீச்சில் ஈடுபட்டனர். அங்கு பதற்றம் நிலவுவதால் பாதுகாப்புக்காக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
நெல்லிக்குப்பம்:
கடலூர் அருகே நடுவீரப்பட்டு அடுத்த குமளங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அய்யனார் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சஞ்சீவிராயன் கோவில் கிராமத்து மக்கள் ஊரணி பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம்.
அதன்படி இன்று சஞ்சீவிராயன்கோவில் ஊர்மக்கள் நடுவீரப்பட்டு காலனி வழியாக ஊர்வலமாக அய்யானார் கோவிலுக்கு சென்று ஊரணிபொங்கல் வைத்து வழிபட்டனர்.
பின்னர் ஊர்வலமாக மீண்டும் நடுவீரப்பட்டு காலனி வழியாக சஞ்சீவிராயன் கோவிலுக்கு அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஒரு குறிப்பிட்ட பாடலை ஒலிபெருக்கில் போட்டுக்கொண்டு ஊர்வலத்தில் சென்ற சிலர் நடனமாடியபடி சென்றுள்ளனர். இது நடுவீரப்பட்டு காலனி பகுதியை சேர்ந்தவர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியது.
கல்வீசி தாக்குதல்
இந்நிலையில், இரவில் நடுவீரப்பட்டு காலனி பகுதியில் இருந்து சாமி வீதிஉலா புறப்படுவதற்காக, சாமிக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காலனி பகுதியை சேர்ந்த சிலர், அங்கு நின்ற 3 இளைஞர்களிடம் ஏன் எங்கள் பகுதியில் பாடல் போட்டுக்கொண்டு நடனமாடி செல்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.
அப்போது அவர்களுக்குள் வாய்தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. காலனி பகுதியை சேர்ந்தவர்கள் 3 இளைஞர்களையும் தாக்கினர். இதை பார்த்த சஞ்சீவிராயன் கோவில் கிராமத்து மக்கள் அங்கு ஓடோடி வந்தனர். இதனால் மோதல் மேலும் பெரிதாகி, கல்வீச்சில் ஈடுபட்டனர்.
ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டதால், அந்த பகுதியே போர்க்களம் போன்று ஆனது. மேலும் ஒரு கும்பல் அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி மற்றும் பேனர் ஆகியவற்றை கிழித்ததாக கூறப்படுகிறது.
சாலை மறியல்
இந்த சம்பவத்தை கண்டித்து நடுவீரப்பட்டு காலனியை சேர்ந்த பொதுமக்கள் விலங்கல்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பேச்சுவார்த்தை நடத்தி, அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மேலும் அங்கு மோதல் ஏற்படாமல் தடுக்கும் விதமாக பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையில் 75-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
8 பேர் காயம்
இதற்கிடையே இந்த மோதல் சம்பவத்தில் சஞ்சீவிராயன் கோவிலை சேர்ந்த பிரவீன் குமார், ரஞ்சித் குமார், ஹரிஷ் குமார், மருதநாயகம், நடுவீரப்பட்டு காலனியை சேர்ந்த சிபிராஜ், அமுதா, சண்முகம், ராஜேந்திரன் ஆகியோர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த மோதல் சம்பவம் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.