ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை குறித்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்களால் திருவண்ணாமலையில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை குறித்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்களால் திருவண்ணாமலையில் பரபரப்பு ஏற்பட்டது.
வரவேற்பு
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த வேளையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெற்ற வெங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தந்தார்.
சேலத்தில் இருந்து வந்த அவருக்கு திருவண்ணாமலை மாவட்ட எல்லை பகுதியான காட்டாம்பூண்டியில் இருந்து ஆரணி வரை அ.தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது அவர் செல்லும் வழியெங்கும் போஸ்டர்களும், பேனர்களும் வைக்கப்பட்டு இருந்தது.
திருவண்ணாமலையில் வைத்திருந்த பெரும்பாலான பேனர்களில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் படமும், பெயரும் இடம் பெறவில்லை.
மேலும் சில பேனர்களில் ஒற்றை தலைமையே, ஒற்றை தலைமை நாயகரே, பொதுச்செயலாளரே என்று எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டு வைத்திருந்தனர்.
போஸ்டர்கள்
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இந்த பேனர்களால் திருவண்ணாமலையில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று திருவண்ணாமலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
அதாவது அந்த போஸ்டரில் கழகத்தின் பாதுகாவலரே ஒற்றை தலைமை ஏற்று கழகத்தை வழி நடத்த வாருங்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும் அந்த போஸ்டர் யார் ஒட்டியது என்று தெரியாத வகையில் தங்கமகன் ஓ.பி.எஸ். டீம் என்று மட்டுமே குறிப்பிட்டு இருந்தது.
இதேபோல் தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
திருவண்ணாமலையில் அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை குறித்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களால் ஓட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.