1,200 தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை பணி தொடக்கம்
வேலூர் மாநகராட்சியில் தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை பணி தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 1,200 நாய்களுக்கு மேற்கொள்ளப்படுகிறது.
நாய்கள் தொல்லை
வேலூர் மாநகராட்சியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாக புகார்கள் எழுந்தது. நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சியின் ஒவ்வொரு கூட்டத்திலும் கவுன்சிலர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் வேலூர் முத்துமண்டபம் அருகே நாய்களுக்கான கருத்தடை சிகிச்சை மையம் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த கருத்தடை சிகிச்சை மையம் நேற்று பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதற்கான நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் சுஜாதா தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார். இதில் துணை மேயர் சுனில்குமார், கமிஷனர் அசோக்குமார், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மேயர் சுஜாதா கூறியதாவது:-
வேலூர் மாநகராட்சியில் சுமார் 12 ஆயிரம் நாய்கள் இருப்பதாக தெரிய வருகிறது. அந்த நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி முதல் கட்டமாக 1,200 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.
சிகிச்சைக்கு பின் அந்த நாய்கள் மீண்டும் பிடிக்கப்பட்ட பகுதிகளிலேயே விடப்படும். இதற்காக தற்போது ரூ.9 லட்சத்து 90 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு நாய்க்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ள சுமார் ரூ.1,650 செலவாகும். இதில் மாநகராட்சி சார்பில் ரூ.825 செலவிடப்படுகிறது. மீதமுள்ள தொகை, பிராணிகள் வதை தடுப்பு சங்கம் வழங்குகிறது. கருத்தடை செய்த பின்பு 3 நாட்களுக்கு நாய்களின் உடல்நிலை கண்காணிக்கப்படும்.
தடுப்பூசி
மேலும் இந்த மையத்தில் நாய்களுக்காக பரவும் நோயை கட்டுப்படுத்த தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளது.
வெறி, சொறி நோய் பாதிப்புளை தடுக்க நாய்களுக்கு தடுப்பூசி போடுவதுடன், குடற்புழு மருந்தும் வழங்கப்பட்டு கருத்தடையும் மேற்கொள்ளப்படுகிறது.
நாய்கள் தெருக்களில் விடப்பட்ட பின்னர் அவற்றுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்து அந்தந்த பகுதி பொது மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். மனிதாபிமானத்தின் அடிப்படையில் நாய்களுக்கு பொதுமக்கள் ஓரிரு நாட்கள் உணவு, சுத்தமான தண்ணீர் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியின் போது பிராணிகள் வதை தடுப்பு சங்க உறுப்பினர்கள் குமரேஸ்வரன், ருக்ஜி ராஜேஷ், பாலாஜி மற்றும் டாக்டர் ரவிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.